Tuesday, 15 July 2008

அஹோபில திவ்ய தேச யாத்திரை

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
நமோ நாராயணாய நமஹ
லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமினே நமஹ







Day 1


2008 ஜனவரி 24th அப்பாவும் நானும் திருவல்லிக்கேணீல இருந்து கிளம்பினோம். வாசு மாமா டூர்-ல போனோம். ஆத்துல இருந்து மத்தியானம் 3:30 மணிக்கு கிளம்பி வித்யாவை அவாத்துல விட்டுட்டு , பை எல்லாம் கீழே வெச்சிட்டு
பார்த்தசாரதி, நரசிம்ஹர், தாயார் எல்லாரையும் சேவிச்சுட்டு திரும்ப வந்து பை எல்லாம் எடுத்துண்டு கிளம்பினோம். வித்யா அப்பாவும் , அவளும் எங்களை கொண்டு வந்து விட வந்தா. அங்க போனால் ராஜு வெயிட் பண்ணின்டு இருந்தான். வாசு மாமா ,"என்ன மாமி , லேட்-ஆ வரேல்? உங்களை வழி அனுப்ப வந்தவர் சீக்கிரமே வந்துட்டார் , நீங்க இப்போ தான் வரேல் ? சீக்கிரம் ஏறுங்கோ " அப்படின்னு சொன்னார் . நாங்க தான் கடைசியா போனோம்னு நினைச்சி பயந்துடேன். ஆனால் அப்புறமா ஆறு பேர் வந்தா. எல்லாரும் வந்த உடனே "ஜெய் ஸ்ரீமன் நாராயணா" "ஜெய் ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமி"கோஷத்துடன் ஆறு மணிக்கு பஸ் கிளம்பியது.

பஸ்-இல் போய்கொண்டே இருந்தோம். ஒன்பது மணிக்கு காகலூர் என்ற ஊரில் பஸ் நின்றது . ஆஞ்சநேய சுவாமி நன்னா சேவை சாதிச்சார். அப்புறம் தயிர் சாதம், தக்காளி தொக்கு பிரசாதம் சாதிச்சா. கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் பஸ் பிரயாணம் . காலை ஆறு மணிக்கு பஸ் அஹோபிலம் வந்து சேர்ந்தது.

Day 2

அஹோபிலம் மடத்தில் இறங்கி, குளித்து, ரெடி ஆனதும் காபி சாப்பிட்டு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு போனோம். இந்த கோவில் நவ நரசிம்மர் கூட சேர்த்தி கிடையாது.

பிரகலாத வரதர் இங்க மூலவர் திருநாமம். உற்சவர் லக்ஷ்மி நரசிம்மர். கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கார். வலது கையை மடக்கி , இடது கையை தொங்க விட்டு ஆசனத்தில் அமர்ந்து இருக்கார். திருக்கரங்களில் சங்கு, சக்கரம்.ஒரு கரம் அபய ஹஸ்தம் ,இன்னொரு கரத்தில் லக்ஷ்மியை அணைத்துக் கொண்டு இருக்கிறார். தாயார் பெருமாள் தொடை மேல் அமர்ந்து இருக்கிறார் . அர்ச்சகர் நன்னா சேவை பண்ணி வெச்சார். ஸ்ரீதேவி, பூதேவி , ஜ்வாலா நரசிம்மர்,ஆண்டாள் எல்லாரும் எழுந்தருளி இருக்கா.


முன் மண்டபத்தில் உள்ள கல் தூண்கள் - சிற்ப வேலைபாடுகள் எல்லாம் ரொம்ப நன்னா இருக்கு. நவ நரசிம்மரையும் தூணில் சிற்பமா வடிச்சு இருக்கா. "மேல ஏறி வந்து சேவிக்க முடியாதவா, இங்கேயே சேவிச்சுக்கோங்கோ " அப்படினு வாசு மாமா சொன்னார். நரசிம்மரை சேவிக்க முடியனும்ன்னு மனசுக்குள்ள பிரார்த்தனை பண்ணின்டோம்.


அப்புறம் கிளம்பி மடத்துக்கு போனதும் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டோம். பை எல்லாம் வெச்சுட்டு , கேமரா , ஜலம் , பணம் எடுத்துண்டு மேல் அஹோபிலத்துக்குக் கிளம்பினோம். கொஞ்ச தூரம் நடந்ததும் , நடக்க முடியாதவாலை விட்டு, மீதி பேர் கிளம்பினோம். வயது பிரகாரம் முதலில் 70 to 60 , 60 to 50, 50, to 40, 40 to 30 லேடீஸ் முதலில் ஏற ஆரம்பித்தோம். பின்னால் ஜென்ட்ஸ் வந்தா.



கொஞ்ச தூரம் கரடு முரடான பாதை-ல நடந்து போனதும் "அங்க ஸ்தம்பம் தெரியறது பாருங்கோ; அதிலிருந்து தான் நரசிம்மர் தோன்றினார். நாம நிக்கறது எல்லாம் இரணியன் அரண்மனை " அப்படினு காண்பிச்சார். உச்சில கொடி பறந்துண்டு இருந்தது. அப்பா என்னை போட்டோ எடுக்க சொன்னார். நான் காமெராவை எடுக்கறதுக்குள் எல்லாரும் கிளம்பிட்டா. நானும் போட்டோ எடுக்காமையே கிளம்பிட்டேன்.


இதுக்கு அப்புறம் படிக்கட்டு ஏறனும். அப்பா முன்னால ஏறினதை நான் பார்கலை; தயங்கி, தயங்கி ஏறிண்டு இருந்தேன். எனக்கு பின்னால 4,5 பேர் தான் வந்தா. முடியலைனாலும் மெதுவாக ஏறி, எப்படியோ வந்து சேர்ந்தேன். இருந்தாலும் அப்பாவை காணோமேனு பயம். பின்னால வந்தவர் " எனக்கு பின்னால யாரும் இல்ல. உங்காத்து மாமா ஏறி இருப்பார்" அப்படினு சொன்னார். சரின்னு மட மடன்னு ஏறிட்டேன். அங்க பார்த்தா, அப்பா நின்னுண்டு பெருமாள் சேவிச்சுண்டு இருந்தா.

கீழிருந்து கைங்கர்யகாரா , திருமஞ்சன திரவியங்கள், பிரசாதம், வஸ்த்ரம், புஷ்பம் எல்லாம் எடுத்துண்டு வந்து இருந்தா. ரொம்ப நன்னா திருமஞ்சனம் பண்ணி வெச்சா. முன்னால ஏறினவா முதல்ல நின்னுண்டு சேவிச்சா. அதனால கொஞ்சம் எட்டி பார்த்து எல்லாரும் சேவிச்சோம் .

"ஆடி ஆடி அகம் கரைந்து * இசை

பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி* எங்கும்

நாடி நாடி நரசிங்கா! என்று *

வாடி வாடும் இவ்வானுதலே "

- திருவாய்மொழி 2-4-1


"மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து *

வேரிமயிர்ப்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி*

மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு * "

- திருப்பாவை 23


"அங்கண்ஞாலமஞ்ச அங்குஓராளரியாய் * அவுணன்

பொங்க ஆகம்வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *

பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்

செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேல்குன்றமே "

- பெரிய திருமொழி 1-7-1

என்று எல்லாரும் கண்ணீர் மல்க ஜ்வாலா நரசிம்மனை சேவித்தோம்.


ஜ்வாலா நரசிம்மர் - 300 படி ஏறி , 3 மைல் ஏறி வந்து அவரை சேவிக்க வேண்டும். 10 திருக்கரங்களுடன் எழுந்து அருளியிருக்கார். இவர் தான் இரணியனை வதம் பண்ணியவர். 2 திருகரங்களால் இரணியனைப் பிடித்துக் கொண்டும், 2 திருக்கரங்களால் அவன் குடலை உருவிக் கொண்டும், 2 திருக்கரங்களால் அதை மாலையாகப் போட்டுக் கொண்டும், 2 திருக்கரங்களால் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டு, "நான் தான் நாராயணன்" என்பது போல சேவை சாதிக்கிறார்.ரொம்ப ஆச்சர்யமான சேவை; அதி அற்புதமான சேவை; எனக்கு கண்ணுல ஜலம் வந்துருத்து. எல்லாருக்கும் இந்த சேவை கிடைக்கணும்னு வேண்டின்டேன்.


பாப்பா அக்காவை தான் நினைச்சுண்டேன். "என்னை அஹோபிலம் மட்டும் கூட்டிண்டு போய்டு" அப்படினு அப்பா கிட்ட சொல்லிண்டு இருப்பா. அக்காவை கூட்டிண்டு போக முடியலயேன்னு வருத்தமா இருந்தது.

சின்ன இடமா இருந்தாலும், 4 4 பேர்-ஆ சேவை பண்ணி வெச்சா. எல்லாரும் பெருமாள் சேவிச்சுட்டு வந்த உடனே அங்கேயே பஞ்சாமிருதம், பானகம், கேசரி பிரசாதம் கொடுத்தா. நாராயணா, நரசிம்மா என்ற சத்தம் தவிர வேறு இல்லை.


அங்கிருந்து மாலோல நரசிம்மர் சந்நிதிக்கு வந்தோம். சங்கு, சக்கரம், அபய ஹஸ்தத்துடன் அழகா எழுந்தருளி இருக்கார். நன்னா சேவித்தோம்.


எல்லாருக்கும் ஒரு மூங்கில் குச்சி கொடுத்திருந்தா. அங்க கொஞ்சம் படிக்கட்டு உயரமா இருக்கும்.


அங்க தான் ப்ரகலாதன் படித்த குருகுலம் இருக்கு, போயிட்டு வாங்கோ அப்படின்னு சொன்னார். அப்பாவும், நானும் கொஞ்சம் ஏறினோம். அப்புறம் முடியவில்லை , வேண்டாம்-ன்னுவந்துட்டோம். அந்த இடத்தில் போட்டோ எடுத்துண்டோம். எல்லா இடத்திலையும் உயரமான படிக்கட்டு . பெருமாள் கிருபை தான் கூட்டிண்டு போகனும்.

அங்கிருந்து இறங்கி அஹோபிலம் சந்நிதி. இங்க தான் ஆதிவான் சடகோப்ப ஜீயருக்கு காசாயம் கொடுத்தா. பெருமாள் , சின்னவரா ரொம்ப அழகா இருக்கார். சுயம்பு மூர்த்தி இன்னொரு பெருமாளும் இருக்கார். குகைக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கார். அர்ச்சகர் நன்னா சேவை பண்ணி வெச்சார். இரணிய வதம் பண்ணின உடனே தேவர்களுக்கும், தாயாருக்கும் சேவை. லக்ஷ்மி நரசிம்மர் ப்ரகலாதனுக்கு சேவை சாதிக்கிறார். ப்ரஹ்மாவும், தேவர்களும் இங்கே வந்து சேவிக்கிறார்கள். தாயார் சந்நிதியும் உள்ளது. சேவித்தோம்.



அடுத்தது, சத்ரவட நரசிம்மர்- அழகான ரூபம். குடை போன்ற ஆலமரத்தடியில் வீற்றிருந்தத் திருக்கோலம். சத்ர என்றால் குடை; வட என்றால் ஆல மரம். நிறைய திருஆபரணம் , சங்கு, சக்கரம் , அபய ஹஸ்தம், இடது திருக்கரம் தொடை மேல் முத்திரையாக உள்ளது. உக்ர நரசிம்மரை சாந்தப் படுத்த தேவ சபையில் இருந்து "ஆஹா" "ஓஹோ" என்ற கந்தர்வர்கள் "ஆஹா" "ஓஹோ" சொல்லிக்கொண்டே தங்கள் இசையால் சாந்தப் படுத்தினார்களாம். அதை ரசித்து தாளம் போடராராம் பெருமாள்.

யோக நரசிம்மர் - ப்ரகலாதனுக்கு யோகா முத்திரைகள் சொல்லி கொடுத்தாராம். அதே யோக முத்திரையுடன் சேவை சாதிக்கிறார்.


நன்னா சேவித்து விட்டுஅஹோபில மடம் வந்தோம். 8 மணிக்கு மேல ஆயுடுத்து.
சுட, சுட தளிகை சாப்பாடு . நன்னா சாப்பிட்டோம். "எல்லாரும் படுத்துக்கோங்கோ. காலை 2:30 மணிக்கு எழுப்பி விடுவேன். குளித்து விட்டு உடனே கிளம்பனும்" அப்படின்னு சொன்னார்.


Day -3

காலை 3:30 மணிக்கு எல்லாரும் கிளம்பியாச்சு. கொஞ்ச தூரம் பஸ் பிரயாணம். அப்புறம் நடக்கனும். "நிறைய ஜலம் எடுத்துக்கோங்கோ . அங்கே எதுவும் கிடைக்காது . டார்ச் லைட் வெச்சுக்கோங்கோ. மூச்சு வாங்காம, வேர்காம வரணும்" அப்படினு சொன்னார்.



கொஞ்ச தூரம் நடந்து இருப்போம். அப்பாவுக்கும், எனக்கும் பயம் வந்துடுத்து. நடக்க முடியாது, கிளம்பிடுவோம் அப்படினு நெனைச்சோம். அப்புறம் "ஏன் முடியாது, நரசிம்மர் தைரியத்தை கொடுப்பார். வா போகலாம்" அப்படினு அப்பா சொன்னார். சரி, நரசிம்மர் கூட்டிண்டு போவார் , போலாம் என்று இருந்தோம். அந்த மாமா எல்லாரையும் வரிசையா நிற்கச் சொன்னார். முடியாதர்களை இருக்க சொல்லி விட்டு , கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் ஏறனும் என்று சொன்னார்.



ஒரு கைல கொம்பு, ஜலம், இன்னொரு கைல கேமரா, பணம், டார்ச் லைட் எல்லாம் வெச்சிண்டு ஏறினோம். guide ஒருத்தர் முன்னாடி நடக்க , 10 பேர்க்கு ஒருத்தரா ஏறினோம். "நாராயணா நரசிம்மா" என்ற சத்தம் தவிர வேற ஒன்னும் இல்லை. கனீர், கனீர்-ன்னு சத்தமா சொல்லிக்கொண்டே ஏறினோம். "எல்லாரும் நடக்காம , ஓடுங்கோ. வெயில் வந்தா ஏற முடியாது . கஷ் டமா இருக்கும்" என்று சொன்னார். கரடு முரடான பாதை , மூங்கில் காடு, கொஞ்சம் படிகள் - மாறி, மாறி உயரமா இருந்தது. அப்புறம் கொஞ்ச தூரம் பாதை . ஓட்டமா ஓடி போய் அந்த நரசிம்மரைப் பிடித்தோம். 3 மணி நேரம், 1000 படிகள், 7 kms போயிருந்தோம். எப்படி தான் ஏறினோம்னு தெரியலை. முதலில் போய் நின்று கொண்டு பெருமாளை சேவித்தோம்.




பாவன நரசிம்மர் - இந்த பெருமாளோட திருநாமம் பாவன நரசிம்மர். செஞ்சு லக்ஷ்மி தாயாரோட சேவை சாதிக்கிறார். செஞ்சு லக்ஷ்மி ஒரு வேடுவப் பெண். மகாலக்ஷ்மி வேடுவக் குலத்தில் பிறந்து ஸ்ரீமன் நாராயணனை திருமணம் செய்ய காத்துண்டு இருந்தாளாம் . இரணிய வதம் முடித்தவுடன் உக்ரத்துடன் "ஆ ஊ "ன்னு திரின்சுண்டு இருந்தாராம் பெருமாள் . அவரைப் பார்த்து தாயார் பயப்பட , "ஏன் பயப்படறே? என் மடியில் வந்து உட்கார். " என்று பெருமாள் சொன்னாரம். "பயமாக இருக்கிறது. சாந்தமாக இருந்தால் தான் உன் அருகில் வருவேன்" என்று தாயார் சொல்ல, பெருமாளும் சிரித்துக் கொண்டு அவளை அமர்த்திக் கொண்டாராம்.




அழகா நம்மைப் பார்த்து சிரிக்கற மாதிரி இருக்கார். அதி ஆச்சர்யமான சேவை. ரொம்ப நன்னா சேவித்தோம். எல்லாருக்கும் தத்யோனப்பிரசாதம். திவ்யமான சேவை. விளக்கு ஏற்றி ஸேவிச்சாச்சு. அங்க இருக்கிற வேடுவர்கள் எல்லாம் பெருமாளுக்கு பலி கொடுக்கிறா.


பாதாம் பருப்பு , திராட்சை, கல்கண்டு எல்லா பிரசாதங்களையும் வாங்கின்டு, விளக்கு ஏற்றி விட்டு கிளம்பினோம். கொஞ்சம் தூரத்தில் செஞ்சு லக்ஷ்மி தாயார் குகை இருக்குன்னு சொன்னார். எங்களைப் போக வேண்டாம்னு சொல்லிட்டார். நாங்க அங்கேயே நின்னுண்டு இருந்தோம். கொஞ்ச நேரம் ஆன உடனே போகலாம்னு கிளம்பினோம். "யாரும் தனியா போகக் கூடாது ; சேர்ந்து தான் போகணும்" ன்னு சொன்னார். அப்புறம் எல்லாரும் வந்த உடனேக் கிளம்பினோம்.


திரும்பறப்போ நன்னா வெளிச்சமாயிடுத்து. அப்பா, தளிகைக்காரா, இன்னும் இரண்டுப் பேர் முன்னால இறங்கிட்டா . எல்லாரும் வேகமா இறங்கறா. நான் கொஞ்ச தூரம் வேகமா நடந்தேன் , அப்புறம் முடியலை . கோவிலுக்கு போறச்சே முதலில் போனேன். திரும்ப வரப்போ முடியலை. போறப்போ கஷ்டமா இருந்தாலும், வேகமா போகச் சொல்லிண்டே இருந்ததாலே ஏறிட்டேன்.

பாவன நரசிம்மர் - ஆதிசேஷன் மேல் வீற்றிருந்தத் திருக்கோலம். சங்கு, சக்கரம், அபய ஹஸ்தம் , இடது தொடைல தாயாரோட சிரிச்சுண்டு இருக்கார் . ஆச்சர்யமான சேவை. அவனை சேவிக்க எப்படியோ ஏறிட்டேன். திரும்ப வர முடியலயேன்னு அவனையேப் பிரார்த்தித்துக் கொண்டு இறங்க ஆரம்பிச்சேன்.

எனக்கு பின்னால வந்தவா எல்லாரும் போய்டா. என்னை மாதிரியே இன்னும் கொஞ்ச பேருக்கும் முடியலை. மெது, மெதுவா இறங்கறோம். ஒரு மாமிக்கு கால் நரம்பு அப்பப்போ இழுத்துக்கறது. அந்த மாமா "moov" தடவி, க்ளுகோஸ் வாட்டர் குடுத்து ஆசவாசப் படுத்தி கூட்டிண்டு வரார். அவா சாளகிராமம் தவிர எல்லா திவ்ய தேசமும் போய்ட்டு வந்தாச்சாம். அந்த மாமி பருமனாகவும் இருக்க, கால் வலியோட எப்படி தான் போறாளோ? எல்லாம் பெருமாள் கிருபை. அப்புறம், ராவ்ஜி , அவாளுக்கும் முடியலை. ஒருத்தர் மேல ஒருத்தர் கை போட்டுண்டு, கொம்பு ஊணிண்டு இறங்கிட்டா. ஒரு 70 வயசு பாட்டி, போறச்சே முதலில் ஏறிட்டா. வரச்சே பாதி தூரம் வந்து முடியாம போனதாலே guide தூக்கிண்டு வந்துட்டார். நான் பயந்தேப் போய்டேன். இரண்டுக் கொம்பு வெச்சிண்டு இறங்கினேன். பை வேற தடுக்கறது , நாக்கு வேற வரட்டறது , "நாராயணா நரசிம்மா" ன்னு சொல்லிக் கொண்டே இறங்கினேன். guide வந்து help பண்ணவான்னு கேட்டார். வேண்டாம்னு சொல்லிட்டேன். "பெருமாளே! என்னைக் கஷ்டப்படுத்தாம கூட்டிண்டு போய்டு"ன்னு வேண்டிண்டு மட மடன்னு இறங்கிட்டேன். நரசிம்மன் கண்ணுக்குள்ளயே இருக்கறாப்போல இருக்கு. எல்லாம் அவன் கிருபை. சனிக்கிழமை தோரும் இன்னமும் அந்த வேடுவர்கள் பலி கொடுப்பார்களாம்.


அங்கிருந்து அஹோபிலம் சந்நிதி வந்து பெருமாளை சேவித்தோம். பஸ்சில் மடத்துக்குப் போனோம். கல்யாண சாப்பாடு மாதிரி இருந்தது. என்னால தான் சாப்பிட முடியலை. "கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துகோங்கோ . 4:30 க்கு பார்கவ நரசிம்மரை சேவிக்க போனும்" அப்படின்னு சொன்னார். அப்பா கிட்ட "நான் வரலை. நீங்கோ போய்ட்டு வாங்கோ"ன்னு சொல்லி விளக்கு, திராட்சை, கல்கண்டு எல்லாம் கொடுத்தேன். ஆத்துலேந்து 12 விளக்கு எடுத்துண்டு வந்திருந்தேன், எல்லா சந்நிதிலேயும் ஏற்றினேன். பார்கவனை மட்டும் சேவிக்க முடியலை. அப்புறம் அப்பா வந்து "நீயும் வந்திருக்கலாம். திருநீர்மலை மாதிரி தான் இருந்தது" அப்படின்னு சொன்னார். சரி, குடுப்பினை இல்லை, கிடைக்க்லைன்னு நினைச்சுண்டேன்.


நாங்க சென்னை லேந்து கிளம்பறதுக்கு முன்னாடி "திருநீர்மலை ஸேவிச்சோமே! சுலபமா இருந்ததே.அஹோபிலம் போக முடியுமா?" அப்படின்னு நினைச்சோம். ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் தான் " தெய்வமல்லால் செல்ல ஒன்னா சிங்க வேல் குன்றமே" ன்னு ஆழ்வார் பாசுரப்படி எவ்ளோ பெருசுன்னு தெரிஞ்சுது. அவன் கிருபைனால தானே நமக்கு கிடைச்சதுன்னு நினைச்சுண்டோம்.

அஹோபிலத்துல எல்லா நரசிம்மரையும் சேவிச்சதும் அன்று சாயங்காலம் கிளம்பி மகா நந்தி பார்க்க வந்தோம். எல்லாரும் சாப்பிட்டதும் கிளம்பி மந்த்ராலயம் வந்தோம். துங்கபத்ராவில் தீர்தமாடினோம். வர வழியில் ஒரு ராமர் கோவில். சேவித்து விட்டு சென்னை கிளம்பியாச்சு.

முதலில் அஹோபிலம் போறதுக்கு , ராதாவும் அவ ஆத்துக்காரரும் போக டிக்கெட் வாங்கிக் குடுக்க சொன்னா. சரின்னு 5 டிக்கெட் சொல்லிட்டு வந்தோம். எங்களுக்கு பஞ்ச த்வாரகை போகறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு வந்தோம். அப்புறம் ராதா வர முடியாததால , நாங்க மட்டும் அஹோபிலம் கிளம்பினோம்.

"துணை இல்லாம நாம போக முடியுமா?" ன்னு அப்பாவைக் கேட்டேன். "என்ன துணை? எல்லாம் பெருமாள் கூட்டிண்டு போவார். பயந்துகொண்டே இருந்தால் எங்கேயும் போக மாட்டோம். போயிட்டு வரலாம் வா" என்று அப்பா தான் சொன்னார். நல்ல படியா போயிட்டு வந்தோம்.


த்வாரகை கண்ணன் இன்னும் எங்களைக் கூப்பிடலை. போக முடியாமல் போய்டுத்து. எப்போ அவன் சேவை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஸ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி டிவி-ல அவர் போன திவ்ய தேசம் எல்லாம் காமிக்கிறார். ரொம்ப நன்னா இருக்கு. அந்தப் பெருமாள் எங்களுக்கு சேவை கொடுக்கணும்-ன்னு பிரர்த்திசுக்கறேன்.


புஷ்கரம், நைமிசாரன்யம் , கயா, அயோத்யை , சாளக்ராமம், கோவர்தன கோகுலம் போக ஆசை. அவன் கிருபை வேண்டும். அவன் நடத்திக் கொடுப்பான்.


போகும் போது பகவத் விஷயங்களை பேசிண்டு போனோம். வரச்சே எல்லாரும் குஷியா மாயா பஜார் , கொஞ்சும் சலங்கை எல்லாம் பார்த்துண்டு வந்தோம். விடிந்து 4:00 மணிக்கு வந்து சேர்ந்தோம். அஹோபிலம் யாத்திரை இனிதே முடிந்தது. தவறோ சரியோ, எனக்குத் தெரிந்ததை, ஞாபகம் உள்ளதை எழுதி இருக்கேன்.


ஜெய் ஸ்ரீமன் நாராயணா. ஜெய் ஸ்ரீ நரசிம்மா


2 comments:

Nimisha R. Rangarajan said...

Dear Amma & Appa,

Superb!! descroption of the trip. Naan anga vandirukkarche pesa neramum illa, kekkavum gnabagam illa.

Romba azhaga ezhudi irukkel. Neenga melum idhu madiri trips poi engalai asirvatham pannavum, innum idhu madiri naraiya ezhudavum, Sri. Ranganatharai prarthithukaren.

Ungal anbulla

Sriram

Nimisha R. Rangarajan said...

Dear Vidhya,

Thank you for taking the time to painstakingly type and publish the Ahobilam story in this beautiful web site.

I am glad you were able to do this. It is a wonderful recognition of Amma's knowledge, ability to describe a story and write a story.

I'll do my best to help you in writing more of this.

Sriram